கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 10 கிலோ பறிமுதல்


கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 10 கிலோ பறிமுதல்
x

கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

ஒடிசாவில் இருந்து டன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் செங்குன்றம் மற்றும் மீஞ்சூர் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது செங்குன்றம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 6 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் கஞ்சாவை கடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவக்குமார்ஷா (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் மீஞ்சூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபரை பிடித்து செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் சோதனை செய்ததில் அவரிடம் 4 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரமோத்கர்ணா (25) என்பதும், அங்கிருந்து கஞ்சாவை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கஞ்சா கடத்திய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story