கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது


கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
x

சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

கஞ்சா கடத்தல்

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி, இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் போலீசார், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் பார்த்திபன் (வயது 34), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மட்டிகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரசன் மகன் கோபிநாத் (26) என்பதும், இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்திக்கொண்டு சில வாகனங்களின் மூலம் லிப்ட் கேட்டு விழுப்புரம் வந்திறங்கியதும், இங்கிருந்து உளுந்தூர்பேட்டை பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பஸ்சிற்காக காத்து நின்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பார்த்திபன், கோபிநாத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story