முன்விரோத தகராறில் வியாபாரியை குத்தி கொன்ற 2 பேர் கைது


முன்விரோத தகராறில் வியாபாரியை குத்தி கொன்ற 2 பேர் கைது
x

கடலூர் முதுநகரில் சம்சா வியாபாரியை குத்திக்கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் சின்ன தைகால் தோனிதுறை பகுதியை சேர்ந்தவர் முகமது மொய்தீன் (வயது 70). இவருக்கு ஜாகிர் உசேன் (50), நூருல்லா சாகிப் (36), சாகுல் ஹமீது ஆகிய 3 மகன்கள் உள்ளனர். முகமது மொய்தீன் பூர்வீக வீட்டில் தனது 2-வது மகன் நூருல்லா சாகிப்புடன் வசித்து வருகிறார்.

இந்த வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜாகிர் உசேன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டில் ஜாகிர்உசேனின் மருமகனான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமதுஅலியும் (38) வசித்து வருகிறார். ஜாகிர்உசேன், முகமதுஅலி மற்றும் முகமதுமொய்தீன், நூருல்லா சாகிப் ஆகியோர் சம்சா வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஜாகிர் உசேன் வீட்டிற்கு மின்சார இணைப்பு நூருல்லா சாகிப் வீட்டில் இருந்து பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நூருல்லா சாகிப் அவரது வீட்டில் புதிதாக கழிவறை கட்டி வந்துள்ளார். கழிவறை ஜாகிர் உசேன் வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் எனது வீட்டிற்கு சென்றுவர சிரமம் ஏற்படும். எனவே கழிப்பறையை வேறு இடத்தில் கட்டுமாறு ஜாகிர்உசேன், நூருல்லாசாகிப்புடன் கூறியுள்ளார்.

மின்இணைப்பு துண்டிப்பு

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்து ஜாகிர் உசேன் வீட்டிற்கு சென்ற மின்சார இணைப்பை நூருல்லா சாகிப் துண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் நூருல்லா சாகிப், முகமது மொய்தீன் ஆகியோர் சம்சா தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகமது அலி மற்றும் அவருடைய நண்பரான புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் பெயிண்டர் மணிகண்டன் என்கிற ராஜேந்திரன் (32) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நூருல்லா சாகிப்பை கத்தியால் சரமாரியாக குத்தினர். மேலும் அதனை தடுக்க வந்த முகமது மொய்தீனையும் அவர்கள் குத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயம் அடைந்த தந்தை, மகன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நூருல்லா சாகிப் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முகமதுமொய்தீன் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இது குறித்த புகாரின் பேரில், கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஜாகிர்உசேன் வீட்டுக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜாகிர் உசேன் மருமகன் முகமது அலி மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் நூருல்லா சாகிப்பை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story