பேரிகார்டுகளை திருடிய 2 பேர் கைது
காரையூர் அருகே பேரிகார்டுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னமராவதி தாலுகா காரையூரில் இருந்து பாலக்குறிச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பதற்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை மர்ம ஆசாமிகள் சிலர் திருடி சென்றனர். இதையடுத்து அதனை கண்டுபிடித்து தருமாறு காரையூர் போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் பெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் ஆதினிப்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ெசன்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 54), திருவப்பூர் பொன்னப்பன் ஊரணியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பேரிகார்டுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பேரிகார்டுகள் மற்றும் வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.