லஞ்சம் வாங்கி கைதான 2 பேர் பணிநீக்கம்
கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது கைதான 2 பேரை பணிநீக்கம் செய்து கலெக்டர் சமீரன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது கைதான 2 பேரை பணிநீக்கம் செய்து கலெக்டர் சமீரன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோவையில் உள்ள காப்பகங்களை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.
இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்திக் ஆகியோர் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தனர். அவர்கள் 2 பேரும் ஒரு குழந்தையை காப்பகத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
2 பேர் பணிநீக்கம்
இது குறித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திவ்யா மற்றும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 14-ந் தேதி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு துறை ரீதியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த தனலட்சுமி, கார்த்திக் ஆகிய 2 பேரையும் பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து கலெக்டர் சமீரன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.