பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x

பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி இ.பி.ரோடு கீழதேவதானத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சரண்யா (வயது 32). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 4 வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்யாவின் உறவினர் மகன் சரவணன் என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு தான் நின்றபோது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசில் சரண்யா புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் திருச்சி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சிவரஞ்சனி(28). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனது வீட்டிற்கு அருகில் கட்டிட வேலை பார்த்து வரும் ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த மாதப் சமந்தகாயா(26) என்பவருடன், சிவரஞ்சனி நட்பாக பழகி வந்ததாகவும், நேற்று காலை சிவரஞ்சனி வீட்டிற்கு அருகில் அவரது தாயாருடன் நின்றபோது அவரை மாதப் சமந்தகாயா தகாத வார்த்தைகளால் திட்டி, கையை பிடித்து இழுத்து, சேலையை கிழித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதப் சமந்தகாயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story