அட்டகாசம் செய்த 2 கரடிகள் கூண்டில் சிக்கின


அட்டகாசம் செய்த 2 கரடிகள் கூண்டில் சிக்கின
x

கோத்தகிரி அருகே கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 2 கரடிகள் கூண்டில் சிக்கின. அந்த கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டன.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 2 கரடிகள் கூண்டில் சிக்கின. அந்த கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டன.

கரடிகள் நடமாட்டம்

கோத்தகிரி நகர், அரவேனு, ஜக்கனாரை, ஆடத்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி உள்ளிட்டப பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்தது. உயிலட்டி, குன்னியட்டி கிராமங்களில் தொடர்ந்து 3 கரடிகள் உலா வந்தன. மேலும் அந்த கரடிகள் வீடுகளின் கதவை உடைக்க முயற்சித்து, உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தி வந்தது. விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தன.

இதைதொடர்ந்து கரடிகளை பிடிக்க கோரி மீண்டும் வலியுறுத்தினர். கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் கடந்த 3 நாட்களுக்கு முன் உயிலட்டி கிராமத்தில் சாலையோரம் கூண்டு வைக்கப்பட்டது. அதில் கரடிகளுக்கு பிடித்தமான பழ வகைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூண்டில் சிக்கின

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த வழியாக வந்த 3 கரடிகளில், 2 கரடிகள் கூண்டில் சிக்கியது. மற்றொரு கரடி அங்கிருந்து தப்பி சென்றது. கூண்டிற்குள் சிக்கிய கரடிகள் ஆக்ரோஷமாக சத்தமிட்டதால், கிராம மக்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தினர். பின்னர் பிடிபட்ட கரடிகளை கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார், வனவர்கள் ராம்தாஸ், சிவன், வனகாப்பாளர்கள் நாகேஷ், சிவகுமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் 2 கரடிகள் முதுமலை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது.

குன்னூர்

குன்னூர் அருகே பழத்தோட்டம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கரடி புகுந்தது. இப்ராஹீம் என்பவரது பெட்டி கடையை உடைத்தது. மேலும் கடைக்குள் இருந்த பொருட்கள், மிட்டாய்களை தூக்கி சென்றது. இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story