வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது
மானாமதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை
மானாமதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை வழியாக தினமும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் செல்பவர்களை, மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று அவர்களை வழிமறித்து மோட்டார்சைக்கிள், செல்போன், பணம், ஆகியவற்றை பறித்து செல்லும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக அவ்வழியாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்ல அச்சம் அடைந்து வந்தனர். இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தலைமை காவலர்கள் வேல்முருகன், ராஜா, சதீஸ், மருதுபாண்டியன், கண்ணன், சுரேஸ் ஆகியோர் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
2 சிறுவர்கள் கைது
இந்நிலையில் மானாமதுரையில் மதுரை நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.