கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிணத்துக்கடவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் நித்திஷ் கண்ணா (வயது 19), இவருடைய நண்பர் திங்கள் நகரை சேர்ந்த ஆகாஷ் (19). இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று நித்திஷ்கண்ணா தனது மோட்டார் சைக்கிளில் ஆகாசுடன் பொள்ளாச்சிக்கு சென்றார்.
கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நித்திஷ்கண்ணா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நித்திஷ் கண்ணா, ஆகாஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.