வெளிநாட்டு குதிரைகளை வளர்ப்பதாக கூறி ரூ.2½ கோடி மோசடி


வெளிநாட்டு குதிரைகளை வளர்ப்பதாக கூறி ரூ.2½ கோடி மோசடி
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு குதிரைகளை வளர்ப்பதாக கூறி ரூ.2½ கோடி மோசடி

கோயம்புத்தூர்

கோவை

பொள்ளாச்சியில் உள்ள பண்ைணயில் வெளிநாட்டு குதிரைகளை வளர்த்து கொடுப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.2½ கோடியை மோசடி செய்த தந்தை- 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். 11 குதிரைகளும் மீட்கப்பட்டன.

இந்த மோசடி குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

வெளிநாட்டு குதிரைகள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர் (வயது47). இவர் துபாயில் வசித்து வருகிறார். வெளிநாட்டு அரேபிய குதிரைகளை இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பண்ணை அமைத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்ச வேலாம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன் (வயது26) என்பவர் முகநூல் மூலம் ஜெயாநாயரின் கணவர் ஹரிதாசை தொடர்பு கொண்டு, பொள்ளாச்சி பகுதியில் குதிரைப்பண்ணை வைத்து இருப்பதாகவும்,தங்களது பண்ணைக்கு வெளிநாட்டு குதிரைகளை கொடுத்தால் பராமரித்து விற்பனைக்கு தயார் செய்து கொடுப்பதாகவும் கூறினார். இதற்கு தன்னுடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன் (30), தந்தை சீனிவாசன் (58) ஆகியோர் இந்த பண்ணை நடத்த உதவியாக இருப்பதாகவும் கூறினார். இதனை நம்பிய ஜெயா நாயர் அவரிடம் 15 வெளிநாட்டு குதிரைகளை கொடுத்து பராமரிக்குமாறு கூறினார். இதற்கு ஒப்பந்தமும் செய்துகொண்டனர்.

ரூ.2½ கோடி மோசடி

இதைத் தொடர்ந்து குதிரைகளை பராமரிக்க தீவனம் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ஜெயா நாயர் ரூ.3 லட்சம் அனுப்பி வந்துள்ளார்.

இந்தநிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள இவர்களது பண்ணைக்கு குதிரையை ஒருவர் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. அந்த தகவலை விசாரித்தபோது அது பொள்ளாச்சி ஹரிவராசன்தான் என்பதை ஜெயாநாயர் அறிந்தார். தங்களது குதிரையை, தங்களது பண்ணைக்கே விற்க முயன்றபோதுதான் இந்த மோசடி அவருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா நாயர், பொள்ளாச்சியில் உள்ள பண்ணைக்கு வந்து பார்த்த போது, 15 குதிரைகளுக்கும் முறையான தீவனம் கொடுக்காததால் நோஞ்சான் குதிரையாக மாறி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இவர்கள் அனுப்பிய பணத்தை குதிரை பராமரிப்புக்கு பயன்படுத்தாமல் மோசடி செய்து இருப்பதுடன், சில குதிரைகளை விற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.

மொத்தம் ரூ.2½ கோடி மதிப்பில் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து ஜெயா நாயர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவின்பேரில், டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆலோசனையின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

தந்தை-மகன்கள் கைது

மோசடி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹரிவராசன், அவருடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன், தந்தை சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் 11 குதிரைகள் மீட்கப்பட்டன. கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தெனாலிராமன் கதைபோல் நடந்த இந்தமோசடி விவகாரம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story