ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம்..!


ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம்..!
x

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை தி.நகர் வீட்டில் இருந்து புறப்படும் சசிகலா கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி-அந்தியூர் பிரிவுக்கு மாலை 4 மணி அளவில் வருகிறார். அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா கவுந்தப்பாடியில் நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார். பின்னர் திருப்பூர் செல்லும் சசிகலா அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

அதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம், அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகே ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story