'நிபா' வைரசுக்கு 2 பேர் பலி எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் ‘நிபா’ வைரசுக்கு 2 பேர் பலியான நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
ஊட்டி,
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டனர்.
ஆனால் அவ்வப்போது புதுப்புது வைரஸ் நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 'நிபா' வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது.
2 பேர் பலி
கோழிக்கோடு மாவட்டத்தில் 49, 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் 'நிபா' வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நோய் பரவல் கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
முககவசம் கட்டாயம்
இந்த பகுதிகளில் பொதுமக்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளாட்சித்துறை அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் மட்டும் குறைந்த ஊழியர்களுடன் ஆன்லைன் மூலம் செயல்படும். தனியார் மற்றும் பொது வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்த வழியாக செல்லும் பஸ்கள் நிபா வைரஸ் அறிகுறி தென்பட்ட இடங்களில் நிறுத்த அனுமதி இல்லை. கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
நடமாடும் பரிசோதனை குழு
மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் மக்கள் உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் நோய் தொடர்பான ஆய்வகத்தில் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு 3 பேர் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இந்தநிலையில் கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவலை தடுக்கவும், தடுப்பு பணிகளை கண்காணிக்கவும் மத்திய சுகாதார குழு கோழிக்கோட்டுக்கு சென்றது, மேலும் புனேயில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் இருந்து நடமாடும் (மொபைல்) பரிசோதனை குழு கோழிக்கோட்டுக்கு விரைந்து உள்ளது. இந்த குழுவினர் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உள்ளனர்.
எல்லையில் கண்காணிப்பு
தமிழகத்திற்குள் 'நிபா' வைரஸ் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி கேரள மாநிலத்தையொட்டிய பகுதிகளான நீலகிரி, தென்காசி, தேனி, குமரி மாவட்டங்களில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சோதனை சாவடியிலும், தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியிலும் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பரிசோதனை செய்து அனுமதிக்கிறார்கள்.
கோவை-கேரள எல்லையில் வாளையாறு உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்கள் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.
புளியரை
புளியரை சோதனை சாவடியில் இந்த பணிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த அம்மாநில அரசு பஸ்சில் கலெக்டர் ஏறி, பயணிகளிடம் 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தனிமைப்படுத்த உத்தரவு
இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர 'நிபா' வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், கேரளாவில் இருந்து வருபவர்களை அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.
அமைச்சர் பேட்டி
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 'நிபா' வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு எதிரொலியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தமிழக-கேரள எல்லைகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.