டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த கன மழை: திருவாரூர் மாவட்டத்தில் வீடு இடிந்து 2 பேர் பலி


டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த கன மழை:   திருவாரூர் மாவட்டத்தில் வீடு இடிந்து 2 பேர் பலி
x

டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய கன மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மூதாட்டிஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய கன மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விடிய, விடிய பெய்த கனமழை

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை வரையில் விடிய, விடிய கன மழை பெய்தது. இந்த கன மழையால் இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. வறண்டு கிடந்த கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. முன்பட்ட குறுவை சாகுபடி செய்த வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் சாய்ந்தன. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி(வயது 80). இவருடைய மனைவி இந்திராணி(70). இந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

கடந்த 1993-ம் ஆண்டு அரசின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் கணபதியும், இந்திராணியும் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெய்த கன மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.

கணவர் சாவு-மனைவிக்கு சிகிச்சை

சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கணபதி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

படுகாயம் அடைந்த இந்திராணிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

குடவாசலில் மூதாட்டி சாவு

இதேபோல் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் வடவேர் சாலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(70). இவர், அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழை காரணமாக இவர் குடியிருந்து வந்த கூரை வீடு இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று அலமேலு அந்த வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து கட்டிலில் படுத்திருந்த அலமேலு மீது விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகம்

இதை அறிந்த குடவாசல் தாசில்தார் குருநாதன் மற்றும் போலீசார் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 முதியவர்கள் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story