கூடங்குளம் கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 2 ஜெனரேட்டர்கள் மீட்பு


கூடங்குளம் கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 2 ஜெனரேட்டர்கள் மீட்பு
x

கூடங்குளம் கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு 2 நீராவி ஜெனரேட்டர்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்காக 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கடந்த 8-ந் தேதி கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.

கடலுக்குள் சாலை அமைப்பு

கூடங்குளம் பகுதியில் சென்றபோது மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நீராவி ஜெனரேட்டர்களுடன் அலையில் இழுத்து செல்லப்பட்ட மிதவை கப்பல், கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் பாறை இடுக்கில் தரைதட்டியது.

இதையடுத்து அதனை மீட்பதற்காக சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் பலனளிக்கவில்லை. மேலும் பாறையில் மோதியதில் மிதவை கப்பல் சேதமடைந்ததால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து கடற்கரையில் இருந்து மிதவை கப்பல் வரையிலும் கடலுக்குள் சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு பாறாங்கற்கள், மண் கொட்டி இரவு பகலாக சாலை அமைத்தனர்.

19 நாட்களுக்கு பிறகு மீட்பு

தொடர்ந்து அந்த சாலை வழியாக நேற்று மதியம் அதிநவீன ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய 128 டயர்களைக் கொண்ட ராட்சத லாரி மெதுவாக பயணித்து மிதவை கப்பலை சென்றடைந்தது. மிதவை கப்பலில் இருந்த 2 நீராவி ஜெனரேட்டர்களையும் ஒவ்வொன்றாக மீட்கும் பணி நடைபெற்றது.

அதன்படி லாரியுடன் இணைக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் எந்திரமானது நீராவி ஜெனரேட்டரின் அடியில் சென்று, அதனை மெதுவாக தூக்கியது. தொடர்ந்து அதனை லாரி இழுத்தவாறு வெளியில் வந்தது.

தொடர்ந்து மிதவை கப்பலில் இருந்த மற்றொரு நீராவி ஜெனரேட்டரையும் இரவில் மீட்டனர். மீட்பு பணிகளை கூடங்குளம் வளாக இயக்குனர் சுரேஷ் பார்வையிட்டார்.

கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு நீராவி ஜெனரேட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.


Next Story