நேர்த்திக்கடனுக்காக தயாரான 2 ராட்சத அரிவாள்கள்
மதுரை அழகர்கோவில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவதற்கு சிங்கம்புணரியில் 2 ராட்சத அரிவாள்கள் தயார் செய்யப்பட்டன.
சிங்கம்புணரி
மதுரை அழகர்கோவில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவதற்கு சிங்கம்புணரியில் 2 ராட்சத அரிவாள்கள் தயார் செய்யப்பட்டன.
ராட்சத அரிவாள்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரிவாள் செய்யும் பட்டறைகள் உள்ளன. இங்கு கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்கள் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜெயங்கொண்டநிலை பகுதியை சேர்ந்த குடும்பத்தார்கள் சார்பில் நேர்த்திகடனுக்காக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி உயரத்தில், 200 கிலோவில் 2 அரிவாள்கள் செய்ய இங்குள்ள சேகர் அரிவாள் பட்டறையில் உத்தரவு வழங்கப்பட்டது.
இதனை செய்ய பட்டறை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் 7 நாள் விரதம் இருந்து பணியில் ஈடுபட்டனர். தயார் செய்யப்பட்ட அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த அரிவாள்கள் லாரி மூலம் அழகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பக்தர்கள் பரவசம்
இதுகுறித்து அரிவாள் பட்டறை உரிமையாளர் சேகர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பல கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்கள் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு பலமுறை இங்கிருந்து அரிவாள்கள் செய்து வழங்கப்பட்டுள்ளது. விரதம் இருந்து அரிவாள் செய்யும் பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு வழங்கிய பின்னரே தங்களது விரதத்தை கைவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை அழகர்கோவிலுக்கு 18 அடி உயரம், 200 கிலோவில் 2 அரிவாள்கள் லாரியில் ஏற்றி சென்றதை பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் ஆங்காங்கே நின்று தரிசித்தனா்.