வாய்க்காலில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி


வாய்க்காலில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி
x

திருமானூர் அருகே வாய்க்காலில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியாயினர்.

அரியலூர்

குளிக்க சென்ற சிறுமிகள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகள் மகாலட்சுமி(வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகள் திவ்யபிரியா(14). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் வெற்றியூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று முன்தினம் திவ்யபிரியா வந்துள்ளார். இதையடுத்து நேற்று மகாலட்சுமி, திவ்யபிரியா உள்பட அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் கள்ளூர் பாலம் அருகே உள்ள புள்ளம்பாடி பாசன வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றனர்.

நீரில் மூழ்கி பலி

அப்போது எதிர்பாராத விதமாக மகாலட்சுமியும், திவ்யபிரியாவும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதனை கண்ட உடன் வந்த சிறுமிகள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து வாய்க்காலில் குதித்து இருவரையும் தேட ஆரம்பித்தனர். சில மணி நேர தேடலுக்கு பின் 2 சிறுமிகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்ததில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story