விபத்து வழக்கில்நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி


விபத்து வழக்கில்நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூரை சேர்ந்தவர் துரைக்கண்ணு மனைவி கெஜவள்ளி (வயது 58). இவர், தனது தம்பி சிவக்குமாரின் மகள் காயத்திரியுடன் (7) கடந்த 23.4.2008 அன்று விழுப்புரத்தில் இருந்து ஒரு அரசு பஸ்சில் சென்னைக்கு பயணம் செய்தார்.

திண்டிவனம் அருகே சாரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென அதன் டிரைவர் பிரேக் போட்டார். அந்த சமயத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அரசு பஸ்சின் மீது மோதியது.

இந்த விபத்தில் கெஜவள்ளி தலையில் காயமடைந்தார். சிறுமி காயத்திரிக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்பட்டு உடலின் வலதுபுறம் செயலிழந்து பாதிக்கப்பட்டாள். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நஷ்ட ஈடு

இதுதொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு கெஜவள்ளியும், சிறுமி காயத்திரியின் சார்பில் அவரது தந்தை சிவக்குமாரும் தனித்தனியாக விழுப்புரம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதில் கெஜவள்ளி தொடர்ந்த வழக்கில் அவருக்கு நஷ்ட ஈடாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.10 ஆயிரமும், சிவக்குமார் தொடர்நத வழக்கில் பாதிக்கப்பட்ட அவரது மகள் காயத்திரிக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சத்து 6 ஆயிரமும் அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும் என்று 27.4.2016 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம், 2 பேருக்கும் உரிய நஷ்ட ஈடை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ராஜாராம், 5.8.2022 அன்று நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட கெஜவள்ளிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.35 ஆயிரத்து 800-ம், காயத்திரிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 608-ம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும் அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நஷ்ட ஈடு வழங்காததால் தனித்தனி வழக்காக சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 2 பஸ்களை ஜப்தி செய்யும்படி 13.4.2023 அன்று நீதிபதி பிரபாதாமஸ் உத்தரவிட்டார்.

2 அரசு பஸ்கள் ஜப்தி

இந்நிலையில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூருக்கும், புதுச்சேரிக்கும் செல்ல இருந்த 2 அரசு பஸ்களை கோர்ட்டு முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் பாக்யராஜ், ராஜூ ஆகியோர் ஜப்தி செய்தனர். அதன் பிறகு அந்த 2 பஸ்களும், விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது.


Next Story