காட்டு யானைகள் தாக்கி 2 பேர் சாவு
கோவை அருகே காட்டு யானைகள் தாக்கி ஒரே நாளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
துடியலூர்
கோவை அருகே காட்டு யானைகள் தாக்கி ஒரே நாளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காட்டு யானை தாக்கியது
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை ஆனைக்கட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவை, அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடி வார பகுதியில் உள்ள மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண் டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. அவை சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கோவையை அடுத்த துடியலூர் மாங்கரை பகுதி யில் காட்டு யானை ஒன்று நேற்று இரவு சுற்றி திரிந்தது. பின்னர் அது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அந்த பகுதியில் வசித்து வநதவர் மகேஷ்குமார் (வயது38).
இவர், கோவையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
பரிதாப சாவு
அவர், அங்கு யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று யானை தாக்கியது. இதில் மகேஷ்குமார் அலறியபடி விழுந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா, தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டு அருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு அருகே யானை நின்று கொண்டு இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு யானை அங்கிருந்து சென்றது.
உடனே அவரது மனைவியும், தந்தையும் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு யானை தாக்கியதில் மகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இது குறித்த தகவலின் பேரில் தடாகம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி சாவு
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி தூவைப்பதி மலைகிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம். தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர், யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் காட்டு யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம் போலீசார் விரைந்து வந்து மருதாச்சலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக் கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.








