உளுந்தூர்பேட்டையில்பஸ் மோதி ஊராட்சி செயலாளரின் மனைவி உள்பட 2 பேர் பலிஸ்கூட்டர் வாங்க சென்றபோது பரிதாபம்


உளுந்தூர்பேட்டையில்பஸ் மோதி ஊராட்சி செயலாளரின் மனைவி உள்பட 2 பேர் பலிஸ்கூட்டர் வாங்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஊராட்சி செயலாளரின் மனைவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

ஸ்கூட்டர் வாங்க...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. ஊராட்சி செயலாளர். இவருடைய மனைவி கற்பகவல்லி (வயது 45). இவர் தனது பயன்பாட்டிற்காக பழைய ஸ்கூட்டர் வாங்க முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் தனது அக்காள் மகனான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வினித்குமார் (26) என்பவருடன் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் உள்ள பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார்.

பஸ் மோதியது

பின்னர், இருவரும் ஒரு ஸ்கூட்டரை தேர்வு செய்து, அதனை ஓட்டி பார்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் சென்றுவிட்டு, மீண்டும் கடையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டருடன் கீழே விழுந்த கற்பகவல்லி பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த வினித்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வினித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான கற்பகவல்லி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்

உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலை விரிவாக்கத்திற்கு பிறகு அதிக விபத்துகள் நடப்பதாகவும், வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் கூறி விபத்து நடைபெற்ற இடத்துக்கு வந்த போலீசாரிடம் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நடைபெற்ற இடத்தில் 2 பேரிகார்டுகள் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டன.


Next Story