காரும் பைக்கும் மோதியதில் 2 பேர் பலி; துக்க நிகழ்வுக்கு சென்ற போது நேர்ந்த சோகம்..!
கடலூர் அருகே காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பலியான நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கான் மகன் பெரியசாமி (வயது 40). இவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் கடலூர், ராமநத்தம் அருகே உள்ள நாங்கூருக்கு துக்க நிகழ்வுக்காக சென்றார். இவருடன் உறவினர்களான பதினெட்டான் மகன் வேலு (70) மற்றும் பழனிமுத்து மகன் வேலு (37) ஆகிய இருவரும் சென்றனர்.
அப்போது எதிரே கொரக்கவாடியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (31) என்பவர் காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கும் காரும் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பெரியசாமியும், பதினெட்டான் மகன் வேலுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பழனிமுத்து மகன் வேலு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் காரில் வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.