காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
தியாகதுருகம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்
தியாகதுருகம்
வாகனசோதனை
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மாடூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக விழுப்புரம் நோக்கி அதி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் ஏாளமான மூட்டைகள் இருந்தன. இதில் ஒரு மூட்டையை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிரித்து பார்த்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட 356 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 160 ஆகும்.
கடைகளுக்கு வினியோகம் செய்ய
இதையடுத்து காரை ஓட்டிவந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் முத்துலிங்கம்(வயது 30) என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து முத்துலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து காருடன் 356 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைதான முத்துலிங்கம் மீது ஏற்கனவே சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.