வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டிவனம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
திண்டிவனத்தை அடுத்த கோவடி கிராமம் பெரியதோப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள பெரியசாமி மகன் துரை (வயது 45) என்பவருடைய வீட்டில் 7 சாக்கு மூட்டைகள் இருந்தது. அந்த சாக்கு மூட்டைகளை போலீசார் பிரித்துப் பார்த்தபோது அதனுள் 60 கிலோ எடையுள்ள 17,547 புகையிலை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் துரை, அந்த புகையிலை பொருட்களை, பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்து திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து துரையை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.