2 எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம்


2 எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2022 12:15 AM IST (Updated: 15 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு விழாக்களில் புறக்கணிப்பதாக கூறி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

அரசு விழாக்களில் புறக்கணிப்பதாக கூறி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அரூர் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆகியோர் நேற்று மதியம் வந்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான 2 பேரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பேச்சுவார்த்தை

சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள், அரூர் தொகுதி கீழானூர் கிராமத்தில் வாணியாற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 40 லட்சத்தில் புதிய தரைப்பாலம் அமைக்க பூமி பூஜை நடந்துள்ளது. அந்த தொகுதி எம்.எல்.ஏ. வை அழைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிதியை அழைக்காமல் இந்த பணியை எப்படி தொடங்கினார்கள்.

கைவிட்டனர்

மாவட்டத்தில் இதேபோன்று பலமுறை மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அரசு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கீழானூர் கிராமத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து 3 நாட்களுக்குள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இந்த ேபாராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story