கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது


கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை,

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். அவரின் வீட்டில் இருந்த 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை உக்கடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் (28), மற்றும் முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) பாய்ந்தது.

என்.ஐ.ஏ. விசாரணை

இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். அவர்கள், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரையும் சென்னைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு, சம்பவம் நடந்த ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் செல்போன், மடிக்கணினி உள்பட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யார்? இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரின் நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தேக நபர்கள் உள்பட பலரின் செல்போன், இணையதளம் ஆகியவையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

5 பேரை காவலில் எடுத்தது

இந்த சம்பவம் தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (25), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முகமது தவுபீக், பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகிய 3 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே கைதானவர்களில் பெரோஸ்கான், முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு அவர்கள் எங்கெல்லாம் சென்றாா்களோ அங்கெல்லாம் அவர்களை அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

மேலும் 2 பேர் கைது

இந்த நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோவை அல்அமீன் காலனியை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா (38), வின்சென்ட்ரோட்டை சேர்ந்த சனோபர் அலி (30) ஆகிய மேலும் 2 பேரை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

இதில் ஜமேஷா முபின், முகமது அசாருதீன், ஷேக் இயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோர் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி அதை செயல்படுத்த சதி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கைதான உமர் பாரூக் தலைமையில் ஜமேஷா முபின் உள்பட இதில் தொடர்புடையவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியான ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தற்போது கைதான ஷேக் இதயத்துல்லாவிடம் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


Next Story