லாரி உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது
கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வழக்கு: லாரி உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது
சின்னசேலம்
சின்னசேலத்தை அடுத்த மரவாநத்தம் ஏாியில் இருந்து கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன்(வயது 54) தனது அலுவலக உதவியாளர்களுடன் பாண்டியன்குப்பம் சாலை வழியாக ஏரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரி டிரைவரிடம் கிராவல் மண் ஏற்றி செல்வதற்கான அனுமதி சான்றை கேட்டார். அப்போது அங்கு வந்த மேற்படி லாரி உரிமையாளர் வெங்கடேசனின் ஆதரவாளர்கள் கிராம நிர்வாக அலுவலரை ஆபாசமாக திட்டியதோடு லாரியை மறித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சூரியபிரகாஷ், சதீஷ்குமார், வரதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் வெங்கேடசன், ராமர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.