வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 July 2023 2:30 AM IST (Updated: 9 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

2 பேர் கைது

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் கடந்த மே மாதம் 10-ந் தேதி கோத்தகிரி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 7 பாக்கெட் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் பெட்டட்டி அருகே தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். அங்கு 3 கிலோ 300 கிராம் கஞ்சா, எடையிட்டு விற்பனை செய்ய வைத்திருந்த எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் குமார் (வயது 26), கஞ்சன் குமார் (24) என்பதும், பீகாரில் இருந்து கஞ்சன் குமார் ரெயில் மூலம் கஞ்சாவை கொண்டு வந்து வீட்டில் வைத்து அதை எடை போட்டு சிறு பாக்கெட்டுகளில் நிறைத்து, அவற்றை பங்கஜ்குமாரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இதையடுத்து கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் போலீசார் பரிந்துரைத்தனர். பின்னர் கலெக்டர் அனுமதி அளித்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோத்தகிரி போலீசார் கடந்த மே மாதம் 22-ந் தேதி பங்கஜ் குமார், கஞ்சன் குமாரின் சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு சென்றனர். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, இதுகுறித்து தகவல் அளித்து அவர்களிடம் ஆட்சேபனை இல்லை எனக் கையெழுத்து வாங்கியதுடன், அந்த மாவட்ட கலெக்டரிடமும் இதுகுறித்த கடிதம் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கஞ்சன் குமார், பங்கஜ் குமார் இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கோவை சிறையில் இருக்கும் அவர்களிடம், அதற்கான நகல் வழங்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story