பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 2 அலுவலகங்களுக்கு 'சீல்'
கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 2 அலுவலகங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 2 அலுவலகங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
5 ஆண்டு தடை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்கு துணை போவதால் மதக்கலவரத்தை தூண்டுவதாக வும் புகார் எழுந்தன.
இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கடந்த மாதம் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இதை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் ஐ.எஸ். போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்றுக்கூறி அந்த அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது.
அலுவலகத்துக்கு 'சீல்'
மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தில் இந்த அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப் பட்டது. இதையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு 'சீல்' வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை உக்கடம் கோட்டைமேட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகமும், வின்சென்ட் சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சமுதாய கூட அலுவலகமும் உள்ளது.
இந்த 2 அலுவலகங்களுக்கும் 'சீல்' வைக்க வருவாய்த்துறை அதி காரிகள் முடிவு செய்தனர். அதன்படி கோவை தெற்கு தாசில்தார் சரண்யா தலைமையில் வருவாய்த்துறையினர் உக்கடம் கோட்டை மேடு பகுதியில் உள்ள அந்த அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.
அவர்கள், அந்த அலுவலகத்தை திறந்து பொருட்களை சரிபார்த்தனர். இதையடுத்து அந்த அலுவ லகத்தின் ஷட்டர் கதவை பூட்டி 'சீல்' வைத்தனர்.
பலத்த பாதுகாப்பு
அதைத்தொடர்ந்து வின்சென்ட் ரோட்டில் உள்ள மற்றொரு அலுவலகமான சமுதாய கூடத்துக்கு அதிகாரிகள் வந்தனர்.
அந்த அலுவலகத்தில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஆவணங்களை கணக்கெடுத்து சரி பார்த்தனர். பின்னர் அதிகாரிகள் அந்த அலுவலகத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.
இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க கோட்டைமேடு, வின்சென்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.