ஐகோர்ட்டு வக்கீலை கூலிப்படையினருக்கு அடையாளம் காட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐகோர்ட்டு வக்கீலை கூலிப்படையினருக்கு அடையாளம் காட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
வக்கீல் வெட்டிக்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் சாமிநாதன்(வயது 37). சென்னை ஐகோர்ட்டு வக்கீலான இவர் கடந்த 7-ந் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்திற்கு தங்கையின் திருமணத்திற்கு வந்திருந்தபோது, முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் கூலிப்படையை சேர்ந்த 6 பேரும், தஞ்சாவூர் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் 2 பேரும் சரணடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தா.பழூர் போலீசார் நடத்திய வசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் செல்வமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சாமிநாதன் கொலை செய்யப்பட்டது, தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அடையாளம் காட்டினர்
இதையடுத்து செல்வமணியின் அண்ணன் இளையராஜா உள்ளிட்ட 8 பேர் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளையராஜாவின் மனைவி ரெஜினா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருவையாறு கோர்ட்டில் சரணடைந்த கூலிப்படையினரை தனிப்படை போலீசார் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. போலீசாரிடம் கூலிப்படையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சாமிநாதனின் தங்கை திருமணம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் சாமிநாதனின் நடமாட்டம் குறித்தும், சாமிநாதன் தனியாக டீக்கடைக்கு சென்றது குறித்தும் கூலிப்படையினருக்கு 2 பேர் தகவல் தெரிவித்து, கொலை செய்ய வந்த கூலிப்படையினருக்கு சாமிநாதனை அடையாளம் காண்பித்தது தெரியவந்தது.
2 பேர் கைது
அதன்படி அரியலூர் மாவட்டம் மேலணிகுழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகரின் மகன் தினேஷ்(21), தஞ்சாவூர் மாவட்டம் மேலகொட்டையூர் வடக்குத்தெருவை சேர்ந்த சின்னதுரையின் மகன் ஆகாஷ்(21) ஆகியோரை, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.