மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஆரணி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி
ஆரணி அருகே விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42), அரசு பஸ் டிரைவர்.
இவர் கடந்த 19-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து அவர் ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் ஆரணியை அடுத்த பழங்காமூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24) என்பவரும், ஆரணிப்பாளையம் குப்பன் தெருவை சேர்ந்த பிரவீன் குமார் (23) என்பவரும் கனிகிலுப்பை கிராமத்துக்கு சென்றுள்ளனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று 2 பேரிடம் விசாரித்தபோது அவர்கள் மோட்டார்சைக்கிள் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் தமிழ்ச்செல்வன் திருட்டு வழக்கில் பலமுறை சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.