அரசு நூற்பாலையில் திருடிய 2 பேர் கைது
அரியூரில் உள்ள அரசு நூற்பாலையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் அருகே அரியூரில் அரசு நூற்பாலை உள்ளது. மூடப்பட்ட இந்த தொழிற்சாலையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அணைக்கட்டு அருகே உள்ள கலங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த காவலாளி கணபதி என்பவர் சம்பவத்தன்று பணியில் இருந்தார். அப்போது தொழிற்சாலைக்குள் புகுந்த 2 பேர் அங்கிருந்த இரும்புத்தகடுகள் மற்றும் இரும்புக்கம்பிகளை திருடி சென்றனர்.
இதைப்பார்த்த கணபதி அவர்களை பிடிக்க விரட்டிச் சென்றார். ஆனால் அவர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்புக்கம்பிகளை திருடியவர்களை தேடி வந்ததனர். இந்த நிலையில் தொழிற்சாலையில் இரும்புக்கம்பிகளை திருடியது அரியூர் நம்பிராஜபுரத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 25), ராஜாராம் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.