தொழிலாளியின் கழுத்தை பிளேடால் அறுத்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது


தொழிலாளியின் கழுத்தை பிளேடால் அறுத்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
x

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியின் கழுத்தை பிளேடால் அறுத்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

மதுபோதையில் தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சி சிதம்பரவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சுதாகர் (வயது 37), கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிலட்டூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜன் (45) மற்றும் வாலிபர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது சுதாகரின் தம்பி கார்த்திக் (35) தனது அண்ணனை அழைத்து செல்ல அங்கு வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சுதாகர் மற்றும் கார்த்திக்கை பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுதாகர், கார்த்திக் ஆகியோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நடராஜன் உள்ளிட்ட வாலிபர்கள் 4 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதாகரை பார்க்க சென்றனர். அப்போது நடராஜன் தான் வைத்திருந்த பிளேடால் சுதாகரின் கழுத்தை அறுத்து விட்டு ஆட்டோவில் தனது நண்பர்களுடன் தப்பி சென்றார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த சுதாகருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது சுதாகர் நலமாக உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் நடராஜன் மற்றும் கருமேணி ஓடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் கணேசன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story