மூதாட்டியை தாக்கி நகை பறித்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மூதாட்டியை தாக்கி நகை பறித்த வழக்கில்  2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

மூதாட்டியை தாக்கி நகை பறித்த வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 27). ஜான்சன்பேட்டை ஹவுசிங்போர்டு கண்ணாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (26). இவர்கள் கடந்த மாதம் பள்ளக்காடு பகுதியில் வசிக்கும் நசீர்ஜகான் (82) என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் மூதாட்டியிடம் வீடு வாடகைக்கு விசாரிப்பதாக கூறி அவரை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியதோடு அவரது கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபா, ராஜேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கமிஷனர் நஜ்முல்ஹோடா நேற்று உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அஸ்தம்பட்டி மற்றும் கன்னங்குறிச்சியில் நடந்த வழிப்பறி சம்பவங்களில் இவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாகவும், 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் முஸ்தபா குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2016-ம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கில் ராஜேந்திரன் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் முஸ்தபா 4-வது முறையாகவும், ராஜேந்திரன் 2-வது முறையாகவும் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story