ஆடுகள் திருடிய 2 பேர் சிக்கினர்
குறிஞ்சிப்பாடி அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரன், தனக்கு சொந்தமான 5 ஆடுகளை வீட்டின் எதிரே கட்டி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆடுகளின் சத்தம் கேட்டு, அவர் எழுந்து பார்த்தார். அப்போது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆடுகளை திருடிக் கொண்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், தனது மகனுடன் விரட்டிச் சென்று ஆடுகள் திருடிய 2 பேரையும் மடக்கி பிடித்து, குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கடலூர் சேடப்பாளையத்தை சேர்ந்த அருண் (23), சின்னகாரைக்காட்டை சேர்ந்த கபாலீஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண், கபாலீஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.