விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.
ராயக்கோட்டை
தொழிலாளி
ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 43). தறித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சஜ்ஜலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அப்பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவர் சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பெருமாள் மீதும், முனுசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விட்டு சென்று விட்டது இதில் முனுசாமிசம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த பெருமாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு காரேகுல்லு பகுதியை சேர்ந்தவர் தர்மாசிங். இவருடைய மகன் ராகுல்சிங் (வயது 25). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கோவை சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் நேற்று பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்.
சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வரும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இந்த விபத்தில் ராகுல்சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.