வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடையை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 34). ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த உலகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
தேன்கனிக்கோட்டை அருகே தொட்டபேளூர் அடவிசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (32). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-பஞ்சப்பள்ளி சாலையில் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகில் கடந்த 10-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.