கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் 23.8.2021 அன்று போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் கம்பத்தில் இருந்து கோம்பை செல்லும் சாலையில் நாககன்னியம்மன் கோவில் அருகில் வந்த 2 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்தவர்கள் வைத்திருந்த மூடையில் 52 கிலோ கஞ்சா இருந்தது. உடனடியாக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் சி.புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 25), சுந்தர் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு தேனி மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மதுரையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜராகி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்தார். விசாரணை முடிவில் சுந்தரபாண்டி, சுந்தர் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.