ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் கைது


ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:47 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொன்று விடுவதாக ரவுடி மிரட்டியதால் அவரை முன்கூட்டியே திட்டமிட்டு தீர்த்துக்கட்டியுள்ளனர்.

ரவுடி கொலை

ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது 34). பிரபல ரவுடியான இவர் நண்பர்களுடன் சேர்ந்து 16-ந் தேதி இரவு குடமுருட்டி பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

மேலும் கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரவுடி ராஜ்குமார் கொல்லப்பட்ட நாளில் அவர் ஒரு கடையில் சூப் குடித்த போது தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையில் துப்பு துலங்கியது.

அதன்படி தாழக்குடி அருகே உள்ள கனகமூலம் புதுக்குடியிருப்பை சேர்ந்த முத்துக்குமார் மகன் பிரவீன் (23), நாகர்கோவில் ஆசாரிமார் தெருவை சேர்ந்த பிரேம்குமார் மகன் ராமசித்தார்த் (26) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி ராஜ்குமாரை தீர்த்துக் கட்டியதை ஒப்பு கொண்டனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

சூப் கடையில் தகராறு

மேலும் ரவுடி ராஜ்குமாரை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக

கைது செய்யப்பட்ட பிரவீன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஓசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தேன். சம்பவத்தன்று இரவு நானும் எங்கள் ஊரை சேர்ந்த எனது நண்பனும் சந்தைவிளை பகுதியில் உள்ள ஒரு கடையில் சூப் குடிக்க சென்றோம். அங்கு ரவுடி ராஜ்குமார் தனது நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.என்னை பார்த்து அவர் திட்டினார். நான் உடனே தட்டிக் கேட்டேன்.

கோடாரியால் மிரட்டினார்

அதற்கு அவர் என்னை தாக்கியதோடு கோடாரியை காண்பித்து கொன்று விடுவதாக மிரட்டினார். அப்போது அங்கு நின்றவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். பொது இடத்தில் ரவுடி என்னை அடித்தது அவமானமாக இருந்தது.

அதே சமயத்தில் வாக்குவாதத்தின் போது என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும் என நினைக்கிறேன். ஏதாவது வம்பு செஞ்ச, கழுத்தை அறுத்திடுவேன் என ரவுடி ராஜ்குமார் மிரட்டினார். அவரின் இந்த மிரட்டல் எனக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.

ஏற்கனவே சில கொலைகளை செய்தவர் ரவுடி ராஜ்குமார். அவர் சொன்னபடி செய்து விடுவார். எனவே முன்கூட்டியே அவரை கொல்ல வேண்டும் என அந்த நிமிடமே முடிவு செய்தேன்.

தீர்த்துக் கட்டினோம்

இதற்காக நண்பர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தேன். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டபடி பயங்கர ஆயுதங்களுடன் சென்று ரவுடி ராஜ்குமாரை தீர்த்துக் கட்டினோம். என்னுடன் சேர்ந்து மொத்தம் 6 பேர் இந்த கொலையில் ஈடுபட்டோம். ராஜ்குமார் சூப் கடையில் சாப்பிட்டு எங்கு செல்கிறார் என்பதை கண்காணித்து இந்த கொலையை கச்சிதமாக அரங்கேற்றினோம்.

இவ்வாறு பிரவீன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அந்த கும்பல் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை மாதவலாயம் செல்லும் பாதையில் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். ராம்சித்தார்த்தின் மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story