வெவ்வேறு விபத்துகளில் முறுக்கு வியாபாரி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் முறுக்கு வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் முறுக்கு வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
முறுக்கு வியாபாரி
மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 52). முறுக்கு வியாபாரியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மண்ணச்சநல்லூர் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார். அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, துறையூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் தங்கபாண்டியன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தங்கபாண்டியன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்து
ஜீயபுரம் அருகே உள்ள பெரிய கருப்பூர் மேலத் தெருவை சேர்ந்தவர் விஜயன் (43). இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி விஜயன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








