மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாரி மோதியது
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி மீனவர் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் விஜய்(வயது 22). மீனவரான இவர் நேற்று மாலை நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த உறவினரான தினேஷ் மனைவி சத்தியமாலா(28) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வானவன்மகாதேவியில் இருந்து நாகைக்கு சென்று கொண்டிருந்தார்.விழுந்தமாவடி எம்.ஜி.ஆர் .சிலை அருகே சென்றபோது எதிரே ரேஷன் கடைக்கு அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 பேர் பலி
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சத்தியமாலாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சத்தியமாலாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
விபத்து நடந்தவுடன் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.