சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது-சரக்கு ஆட்டோ பறிமுதல்
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தல்
சேலம் டவுன் ஆனந்தா பாலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒருவர் சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சேலம் டவுன் பகுதியை சேர்ந்த இப்ராகீம் (வயது 23) என்பதும், இவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி ஓட்டல்கள் மற்றும் சேலத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
பெண் கைது
இதேபோல் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவல் வந்ததை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ஓமலூர் ரெயில்வே நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பிளாட்பாரத்தில் 7 மூட்டைகளில் ரேஷன் அரிசியுடன் இருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சின்னசேலம் அருகே உள்ள பில்லாங்குளம் பகுதியை சேர்ந்த செல்லம்மா (40) என்பவர் கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 180 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.