பாகலூர் அருகே லாரியை கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் கைது-காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்


பாகலூர் அருகே லாரியை கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் கைது-காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்
x

பாகலூர் அருகே லாரியை திருடிய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் லாரி காணாமல் போனதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

லாரி திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாதையங்கரைப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். அந்த லாரியில், சென்னை தாம்பரம் கன்னடபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (39) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் ஓசூரில் தும்மனப்பள்ளி அருகே குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீதர் கடந்த 5-ந் தேதி மாலை, பாகலூர் அருகே நாரிபுரம் பகுதியில் டிப்பர் லாரியை நிறுத்தி இருந்தார். அந்த லாரி திருட்டு போய்விட்டது.

இது குறித்து ஸ்ரீதர், லாரி உரிமையாளர் சுரேசிற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர் பாகலூர் போலீசில் புகார் செய்தார்.

நாடகமாடிய 2 பேர் கைது

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் பேரிகை அருகே உள்ள நாரிபுரத்தை சேர்ந்த முருகேசன் (40) என்பவர் லாரியை திருடி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், மாலூர் தாலுகா சானமங்கலம் வனப்பகுதி அருகில் நிறுத்தியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று முருகேசனை கைது செய்தனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஸ்ரீதரும், முருகேசனும் நண்பர்கள் என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து லாரியை திருட திட்டமிட்டதும், அதன்படி முருகேசன் லாரியை திருடி செல்ல, ஸ்ரீதர், தான் நிறுத்தி இருந்த லாரியை காணவில்லை என்று முதலாளியிடம் கூறி நாடகமாடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஸ்ரீதரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.25 லட்சம் மதிப்பிலான டிப்பர் லாரி மீட்கப்பட்டது.Next Story