கட்டுமான நிறுவன என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது


கட்டுமான நிறுவன என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2023 12:30 AM IST (Updated: 6 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தையொட்டி, பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவன என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தையொட்டி, பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவன என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

5 தொழிலாளர்கள் பலி

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் பின்பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்ட சுற்றுச்சுவர் அருகே மற்றொரு கான்கிரீட் சுவர் கட்டுவதற்காக அஸ்திவார பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. அப்போது ஏற்கனவே இருந்த கருங்கல் சுற்றுசுவர் 100 அடி நீளத்துக்கு திடீரென்று இடிந்து விழுந்தது.இதில் இடிபாடுகளுக்குள் கட்டிட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (வயது53), நக்கிலா சத்யம் (48), ரப்பாகா கண்ணையா (49), மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிஸ்கோஷ் (40) பருன் கோஷ் (35) ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், சம்பவம்நடந்த ஸ்ரீகிருஷ்ணா கல்லூரிக்கு கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

5 பேர் இறப்பு தொடர்பாக முறையான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளாமல் பணி மேற்கொண்டதாக சீனிவாசா அசோசியேட் கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாஸ், என்ஜினீயர் அருணாசலம், மேற்பார்வையாளர் சாதிக்குல் அமீர் ஆகிய 3 பேர் மீது சட்டப்பிரிவுகள் 288 (கட்டிட பாகங்கள் சிதறி உயிரிழப்பு ஏற்படுவது), 304 (2) மரணம் ஏற்படும் என்று தெரியாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயர் அருணாசலம், சாதிக்குல் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இறந்த தொழிலாளர்களில் பிஸ்கோஷின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 4 தொழிலாளர்களின் உடல்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உதவி கமிஷனர் ரகுபதி ராஜா முன்னிலையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமானத்தில் உடல்கள் செல்கிறது

பின்னர் உடல்கள்ஆம்புலன்ஸ்கள் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து உடல்கள் விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 5 பேர் இறப்பு குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story