விவசாயி உள்பட 2 பேர் விபத்தில் பலி
வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியாகினர்.
விவசாயி சாவு
காரையூர் அருகே உடையாம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 50). விவசாயி. இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சடையம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். மரவாமதுரை விளக்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளைச்சாமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பலி
கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழழகன் (22). இவர், மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தெத்துவாசல்பட்டி பஸ் நிலையத்தின் அருகில் வந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழழகனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.