பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை


பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 22 Jun 2023 4:15 AM IST (Updated: 22 Jun 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கஞ்சா விற்பனை

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடந்த 5.5.22 அன்று சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டியம்மாள் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த பெண்ணின் வீட்டில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஸ் கண்ணன் (42), இந்த கஞ்சாவை விற்பனைக்காக வழங்கியது தெரியவந்தது. இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்த ராஜேஸ் கண்ணன் தலைமறைவானார். பின்னர் போலீசார் கடந்த 1.12.22 அன்று ராஜேஸ் கண்ணனை கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை

கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட ஜெயபாண்டியம்மாள் மற்றும் ராஜேஸ் கண்ணன் மீதான வழக்கு கோவை இன்றியமையா பண்டகப் பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஷ்வரன், கஞ்சா விற்ற ஜெயபாண்டியம்மாள் மற்றும் ராஜேஸ் கண்ணன் ஆகியோருக்கு அதிக அளவு கஞ்சா வைத்திருந்ததற்காக தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், கஞ்சா விற்பனை செய்ததற்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததற்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். மேலும் 2 பேரும் தலா ரூ.6 லட்சம் அபாராதம் கட்ட வேண்டும். அபராத தொகை கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை வதித்து உத்தரவிட்டார்.

இந்த சிறை தண்டனையை 2 பேரும் தலா 20 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவகுமார் ஆஜராகி வாதாடினார்.


Next Story