சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண்


சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 24 March 2023 1:00 AM IST (Updated: 24 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

கிருஷ்ணகிரி அருகே, புதுமாப்பிள்ளை கவுரவக்கொலை வழக்கில் சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் சரண்யா (21).

ஜெகன், சரண்யா இருவரும் காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி சரண்யா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி ஜெகன், சரண்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் சரண்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி ஜெகன் வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி அணை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மாமனார் சங்கர் உள்பட உறவினர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து ஜெகனை வழிமறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெகனை கீழே தள்ளி அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் துடிதுடிக்க கொன்றனர்.

இந்த கவுரவக்கொலை குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில், ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ஜெகனின் மாமனார் சங்கர் அன்றைய தினமே இந்த கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சரண் அடைந்தனர்

இந்த நிலையில் புதுமாப்பிள்ளை ஜெகன் கவுரவக்கொலையில் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் தொட்டதிம்மனஅள்ளி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மகன் நாகராஜ் (21), மில்லனப்பள்ளி அருகே உள்ள தில்லக்குப்பத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் முரளி (20) ஆகிய 2 பேர் நேற்று சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் நீதி மன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு யுவராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

சரண் அடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story