பெட்டிக்கடையில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே பெட்டிக்கடையில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது வீடியோ வைரல் ஆனதால் சிக்கினர்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளின் இரு புறங்களிலும் ஏராளமான பெட்டிக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அதில் மிட்டாய், பிஸ்கட், பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வது போல ஒருவர் மது பாட்டில்களை சர்வசாதாரணமாக விற்பனை செய்யும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே இந்த வீடியோ விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் இது குறித்து 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கெடிலம் பகுதியில் ஓட்டலுடன் சேர்ந்த பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த திருநாவலூரை சேர்ந்த சிற்றரசு(வயது 45), கப்பூரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(47) ஆகிய இருவரையும் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பெட்டிக்கடையை போலீசார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.