கார் கவிழ்ந்து தம்பதி பலி; 4 பேர் படுகாயம்
காங்கயம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஈரோட்டை சேர்ந்த கணவன்-மனைவி பலியானார்கள். ஒரே குடும்பத்தினர் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பழனி கோவில்
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா (32). இவர்களது மகன்கள் தர்ஷன், அகிலன். மதன்குமாரின் மாமனார் பரமசிவன் (64), மாமியார் ராஜாமணி(51). இவர்கள் 6 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு ஒரு காரில் நேற்று காலை சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அதே காரில் ஈரோட்டுக்கு நேற்று மாலை திரும்பி கொண்டிருந்தனர்.
காரை மதன்குமார் ஓட்டி வந்தார். இவர்களுடைய கார் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்துள்ள வட்டமலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
தம்பதி பலி
இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த மதன்குமார் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காருக்குள் இருந்தவர்கள் வௌியே வரமுடியாமல் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரம்யா உயிரிழந்தார்.
4 பேர் காயம்
அதைத்தொடர்ந்து காயம் அடைந்த பரமசிவன், ராஜாமணி, தர்ஷன், அகிலன் ஆகிய 4 பேரை காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மதன்குமாரின் தந்தை முருகேசன் ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.