2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர சான்று பெற்றவையாக அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையமேலூர் மற்றும் வெங்களூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர சான்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையமேலூர் மற்றும் வெங்களூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர சான்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
மத்திய குழு ஆய்வு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் உள்ள இடையமேலூர் மற்றும் வெங்களூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர சான்று தகுதி உள்ள ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த சுகாதார நிலையங்களில் தேசிய தர சான்று வழங்குவதற்காக மத்திய ஆய்வு குழு கடந்த ஆகஸ்டு மாதம் 4 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த டாக்டர் அபிஷேக் சின்வால் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் ருக்மணி மற்றும் மாநில தர ஆய்வு குழுவினை சேர்ந்தவர்கள் நேரடியாக வந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படும் மருத்துவ சேவைகள், மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
தேசிய தர சான்று
இந்த ஆய்வின் அடிப்படையில் தற்போது இடையமேலூர், வெங்களூர் ஆகிய 2 ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேசிய தர சான்று உள்ள ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






