ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
வடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.
வடலூர்,
என்.எல்.சி.யில் பயிற்சி
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேலக்கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் ராம் (வயது 19). இவர் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுரங்கப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருடன் படிக்கும் மதுரை திருநகர் மகாலிங்கம் மகன் கோபி (19), சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரதீப் (19) மற்றும் மாணவர்கள் சிலர், என்.எல்.சி. சுரங்கம்-1 ஏவில் களப்பயிற்சி பெறுவதற்காக நெய்வேலி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ராம் தனது வீட்டிற்கு கோபி, பிரதீப் ஆகியோரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் 3 பேரும் சோ்ந்து கொளக்குடியில் உள்ள இசா பெரிய ஏரிக்கு குளிக்க சென்றனர்.
நீரில் மூழ்கினர்
தொம்பை மதகு அருகில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 3 பேரும் நீரில் மூழ்கினர். இதில் ராம், நீந்தியபடி வெளியே கரைக்கு வந்தார். ஆனால் கோபி, பிரதீப் ஆகியோரால் வெளியே வரமுடியவில்லை.
இதைபார்த்து அதிர்ச்சிடையந்த ராம், அபயக்குரல் எழுப்பினாா். அதற்குள் கோபி, பிரதீப் ஆகியோர் நீரில் மூழ்கினர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஏரியில் இறங்கி அவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் கோபி, பிரதீப் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களின் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.