வாகனம் மோதி 2 மாணவர்கள் பலி


வாகனம் மோதி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்னையை சேர்ந்த மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நண்பரின் அக்கா திருமணத்துக்கு செல்லும் வழியில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது

விழுப்புரம்

திண்டிவனம்

மாணவர்கள்

சென்னை கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கிருபாகரன்(வயது 17). இவர் பிளஸ்-1 முடித்துள்ளார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் ஹரி(19). இவர் அங்குள்ள ஏரோ நாட்டிக்கல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் தங்கள் நண்பர் கவியரசனின் அக்கா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கிருபாகரன், ஹரி உள்பட 6 பேர் நேற்று அதிகாலை 3 மோட்டார் சைக்கிள்களில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.

டீ குடித்தனர்

திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடியில் வந்தபோது அவர்கள் அனைவரும் அங்குள்ள கடையில் டீ குடித்தனர்.

அப்போது ஹரி, கிருபாகரன் இருவரும் அங்கிருந்து முன்னதாகவே புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஹரி ஓட்ட கிருபாகரன் பின்னால் அமர்ந்து இருந்தார். மீதமுள்ள 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

வாகனம் மோதியது

திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிருபாகரன் படுகாயமடைந்தார்.

இதனை பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நண்பர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஒலக்கூர் போலீசார் படுகாயம் அடைந்த கிருபாகரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story